Thursday 28 January 2016

சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன்.
அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என் உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.
"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.
அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.
நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.
சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.
சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன் ஒரு வழியாகிவிடுவோம்.
மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.
"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.
அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.
"சரி! எது நடந்தாலும், அகத்தியர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.
எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன்.
யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.
நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.
சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.
முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.
"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன் எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.
அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம். ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள் செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள், பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.
விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா. அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

No comments:

Post a Comment